என் அம்மா இந்த கேள்விய என்கிட்ட நிறைய தடவ கேட்டிருக்காங்க. அப்போ எனக்கு 15 வயசுக்கு மேல, 22 வயசுக்கு கீழ. அம்மா, அம்மா புது படம் மா, ரஜினி படம்மா….கமல் படம்மா…..

அம்மா ரகுமான் ம்யூசிக் மா, அம்மா அம்மா ஷங்கர் படம்மா னு நிறைய தடவ கேட்டிருக்கேன். அப்போல்லாம் ஒரு கேள்வி கேப்பாங்க. இப்ப இந்த சினிமா பாக்கலைன்னா என்ன செத்துருவியா?
படிப்பு சரியா வராத பல பேரையும் சினிமா பைத்தியம் னு செல்லமா எல்லாரும் கூப்பிட்டாங்க. ஏன்னா சினிமா தலையில ஏறிடிச்சுன்னா படிப்பு தலையில ஒழுங்கா ஏறாது ங்கறது சான்றோர் வாக்கு. இந்தக்காரணத்துக்காகவே சினிமா தியேட்டர் பக்கம் அனுப்ப மாட்டாங்க. படிப்பு கெட்டிடுமாம். ம்ஹும் சினிமா பாக்கலைன்னாலும் படிப்பு வராதுன்னு சொன்னா யாரும் நம்பப்போறதில்ல. ஏன்னா……..படிப்பு வராது. அவ்ளோதான்! சிம்பிள்.

ஒரு முறை நண்பனோடு படம் பார்க்க இரு சக்கர வாகனத்தில் போகும் போது ஒரு விபத்து… எங்க ரெண்டு பேருக்கும் அடிபட்டுது…ஆனா அத்தனையும் உள் காயம். அவனுக்கு சட்டைப்பை மட்டும் கிழிஞ்சிது. எனக்கு உள்ள எங்கேங்கேயோ கிழிஞ்சிது….🙂 அடிபட்ட அடையாளமே எதுவும் இல்லியே, அதனால வீட்டில எதுவும் பிரச்னை ஆகாதுன்னு தெரியும். அதனால பதட்டம் இல்லாம படத்த பாத்தோம். வலி பத்தியா கேக்குறீங்க….ம்…ஊம காயம் னா என்னனு அன்னிக்குதான் தெரிஞ்சுது. நாங்க போன படத்துல குபீர் சிரிப்பு வர்ற காமெடி….ஆ, அம்மானு வலியோடவே படம் பாத்து சிரிச்சிகிட்டு இருந்தது தான், பைத்தியத்தின் உச்சம். இப்ப புரியுதா ஏன் பைத்தியம்னு சொன்னாங்கன்னு….

ஒரு தடவ தேவி தியேட்டர் வாசல்ல, காதல் தேசம் படத்துக்காக லத்தி ல அடி வாங்கினதெல்லாம் என்னனு சொல்ல. “எனக்கு ரெண்டுதான் மச்சி, உனக்கு” என்று நண்பன் கேட்டது, எனக்கு இணையான பைத்தியத்தோடு படம் பாத்திருக்கேன் என்பதை இப்போது நினைத்தாலும் நிறைவா இருக்கு….
எனக்கு தெரிந்து குடும்பத்தோடு நாங்கள் பார்த்த முதல் படமானு தெரியாது, அர்ஜுன் நடித்த “சங்கர் குரு”. அப்பா சைக்கிளில், அம்மாவை பின்னாடி வைத்துக்கொண்டு, என்னையும் என் தங்கையையும் முன்னாடி வச்சுகிட்டு, சென்னை அம்பத்தூர் இல் இருக்கும் ராக்கி தியேட்டருக்கு கூட்டிப்போனது மனசிலிருந்து நீங்கா நினைவு. கஷ்டப்பட்டு அப்பா சைக்கிள் மிதித்து மூச்சு வாங்கியது இன்னும் காதுல கேக்குது…கண் கலங்குது.
எனக்கு பத்தாவது தேர்வு முடிவுகள் வந்த அன்னிக்குதான் என் சித்தப்பா ஊருலிருந்து வந்திருந்தார்.
எல்லாத்துக்கும் என்ன பெஞ்ச் மார்க் ஆ வச்சுப்பாங்க . 60% மேல மத்திய பாட திட்டத்துல வாங்கினத ஸ்டேட் பஸ்ட் ரேஞ்சுக்கு பாராட்டிட்டு, கொழந்தைய திட்டாதீங்க னு சொல்லிட்டு, அழுகுற கொழந்தைக்கு மிட்டாய் மாதிரி,
“சரி வா கண்ணா சினிமா போகலாம்” னு, அவர் கூட்டிட்டு போன படம் “கர்ணா”, ஆவடி ராமரத்னா தியேட்டர்.
என் வாழ்வின் முக்கியமான தருணங்கள்ல அர்ஜுன் எனக்கு ஆறுதல் சொல்லியிருக்காரு என்பதை அறிக 🙂.
படம் பாக்குறதுன்னு வந்துட்டா குடும்பம், நண்பர்களை தாண்டி பக்கத்து வீட்டுக்காரர்களுடனும் போய் படம் பாக்கலாம்னு எனக்கு ஒரு நாள் தெரிஞ்சது…பக்கத்து வீட்டு பெண் பக்கத்து சீட்டுல ஒக்காரணும்னு யாரும் சொல்லாமயே தெரிஞ்சுது.

ஆனா நாங்க போன படம் ஆடி வெள்ளி.
வேலைக்கு போக ஆரம்பிச்சாச்சு. ஓரளவு பெரிய மனிதர் களை சந்திக்கும் வாய்ப்பு உள்ள வேல. சிரிச்சுடாதீங்க
ஒரு பன்னாட்டு வங்கியின் கடன் அட்டை அதாங்க கிரெடிட் கார்டு விக்குற வேல. அப்போல்லாம் கீழ்பாக்கத்தில் ஆர்ம்ஸ் ரோட்டில் வாடகை வீடோ, சொந்த வீடோ இருந்தாலே கிரெடிட் கார்டு குடுத்துருவாங்க.
வசிக்கறாரு அப்படிங்கறதுக்கு ஒரே ஒரு ஆவணம்/டாக்குமண்ட் இருந்தா போதும். எதுக்கு இவ்ளோ செய்தின்னா, ஆளவந்தான்னு கமல் நடிச்ச படம், தேவி தியேட்டரில் ரிலீசான முதல் வாரம், ஏகப்பட்ட கூட்டம். நண்பனும் நானும் இந்த வாரம் எப்படியாவது படத்த பாத்துடணும்னு முடிவு பண்ணிட்டோம். நான் ஆர்ம்ஸ் ரோட்டில் சந்தித்த தேவி திரையரங்கு ஓனர் விசிட்டிங் கார்டு என் கைல. நேரா மானேஜர் ரூமுக்கு போயி, விசிட்டிங் கார்ட நீட்டுனேன்.

மானேஜர்: “என்ன வேணும்”
நான்: “ஆளவந்தான் படத்துக்கு ரெண்டு டிக்கட்”
மானேஜர்: “சாரை எப்படி தெரியும்”
நான்: “***** பாங்கில் வேல செய்யுறேன், அவர அவர் வீட்டுலயே போயி பாத்திருக்கேன்”
இரண்டு டிக்கட் கைக்கு வந்தாச்சு. வாங்கிய ஜோரில் வெளிய வந்தவனை, நண்பன் “சரி விசிட்டிங் கார்டு” எங்கனு கேக்க….உள்ளே ஓடிப்போய் “சார், அந்த விசிட்டிங் கார்டு…….” னு மானேஜரை கேட்டேன்.
மானேஜர்: “அது எதுக்கு உங்களுக்கு”
திருப்பி கேட்டதுமே “திரும்ப திரும்ப இந்த மாதிரி வந்து டிக்கட் வாங்கதான், வேற எதுக்குனு மனசுக்குள்ள சொல்லிகிட்டேன் ஒன்னும் பேசல. வெளிய வந்துட்டேன்.
நண்பன்: “எங்கடா, விசிட்டிங் கார்டு?”
நான்: “அட வாடா டேய் கமல பாப்போம்”……
மூனு படங்கள சென்னை சத்யம் தியேட்டர் ல் தொடர்ந்து பாத்ததுதான் இன்று வரை வாழ்நாள் சாதனை….அதுக்கு மேல தூக்கம் வந்திடுச்சு…

ஒரே படத்த 8 முறை பாத்ததும் வாழ்நாள் சாதனையில வரும். ரஜினி நடித்த சிவாஜி படம் தான் அது. வெறும் ரஜினி யின் ஸ்டைலை வைத்து ஒரு படம், அவ்வளவு பிடிச்சிருந்தது….ஸ்ரேயாவையும் அதுக்கப்புறம் பிடிக்க ஆரம்பிச்சுது…
கடைசியா தியேட்டர் ல பாத்த படம் “தர்பார்”.
படம் பாத்து இன்னியோட கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகுது…நினைச்சாலே உடம்பெல்லாம் கூசுது.
இன்னைக்கு சில படங்கள் 2021 பொங்கலுக்கு வெளி வருவதால் தியேட்டர் ல 100% சதவிகித சீட்டை நிறைக்கபோறதா செய்தி…போகணும்னு துடிக்கிறவங்க கிட்ட எங்க அம்மா என்ன கேட்ட கேள்விய, இவங்கள பாத்து கேக்கணும்னு தோணுது…..”படம் பாக்கலைன்னா செத்துருவியா?”
சௌந்தர்ராஜன். ரா.
.
Sir really good write up…. அப்படியே என் இளமை பருவத்தில் நடந்த பல விஷயங்கள் கண் முன்னே வந்து போகிறது….
LikeLiked by 1 person