கதைக்களத்த முழுக்க முழுக்க விவசாயத்த பின்னணியா வச்சு எடுத்ததுக்கே இந்தக்குழுவுக்கு நம்ம வாழ்த்துகள சொல்லலாம்யா. பொங்கல் திருநாள் அன்னிக்கு விவசாயத்த போற்றுவோம் னு , பாடமா எடுக்காம, படமா எடுத்துருக்காம்லா, லட்சுமணன். லட்சுமணன் யாரும் தெரியுமுல்லா, படத்தோட இயக்குனரு.

நாசா(அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்லா) விஞ்ஞானியா வர்ற ஜெயம் ரவிக்கு திடீர்னு விவசாயத்து மேல பற்று வருது. அதுக்குக்காரணம் தம்பி ராமையா. காஞ்ச பயிருக்கு நட்ட ஈடு கேட்டு போராடுற தம்பி ராமையா வ, காவல்துறை லத்தியால முட்டிய பேத்து அனுப்ப, கடுப்பான ஜெயம் ரவி, காஞ்சிப்போன பயிரோட சோள மணிகளை (மக்கா சோளம்டே!) ஆராயிராரு….விஞ்ஞானி னு முன்னயே சொல்லியாச்சுல்லா….ஆமா நாசா விஞ்ஞானிக்கு ஏதுல விவசாயம் பத்தின அறிவுன்னு கேக்கறீயளா…அதுக்குதான் முன்னமே செவ்வாய் கிரகத்துல ஜெயம் ரவிய எறக்கி விடுரானுவ….இன்னுமா புரியல,சரி படத்த பாரும், வெளங்கிரும்….
இந்தப்பாவி மக்கா தம்பி ராமையா கலெக்டர் ஆபீஸ் முன்னாடியே தீ குளிக்கிராம்யா..கடன் கொடுத்த விவசாய அமைச்சர் ராதா ரவியோட மச்சான் பின்ன கழுத்த பிடிக்காத கொறையா கடன திருப்பி கேட்டுதான் அவன் இப்படி செய்துதான்…. எழவு வீட்டுக்கு வர்ற ராதாரவிய, ஜெயம் ரவி சரியான கேள்வி கேக்குறாம்யா….அதுக்கு ராதாரவி பதிலத்தான் அட ட்ரைலர்ல கூட போடுறாமுல்லா – “விவசாயினால இந்த நாட்டுக்கு நட்டம், கார்பரேட் னால இந்த நாட்டுக்கு லாபம் னு” சொல்லுதான்

நாட்டு விதைகள நம்ம முப்பாட்டன், கோயில் கலசத்துல வச்சான்னு கேள்வி பட்டிருப்பீகளே…அதத்தான் தம்பி ஜெயம் ரவியும் சொல்லுறாமுல்லா. ஆனா, அத மக்கள வச்சு மனித கோபுரம் செஞ்சு, கோவிலின் புனிதம் கெடாம எடுத்ததுக்குத்தான் பாராட்டணும்கிறேன். படமா இருந்தாலும், பயபுள்ளைங்க விவரமா அந்தக்காட்சிய வச்சானுங்கல்லா….இதுக்குக்கூட உமக்கெல்லாம் புல்லரிக்கலைன்னா என்ன மனுஷனய்யா நீரு….

இந்த உலகத்தையே ஏழு குடும்பம்தான் ஆளுதானாம். அவன் சொல்றதத்தான் நம்ம வியாபாரிங்க கேக்குரானுவளாம். அவன் குடுக்கறதத்தான் நாம திங்கணுமாம். அவன் விக்கிறதத்தான் நாம வாங்கணுமாம். என்ன ஒரு அடாவடி பாத்தீகளா அண்ணாச்சி. பின்ன இத்தனைக்கும் ஜெயம் ரவி ஏதாவது செய்யணுமுல்லா….சும்மா சொல்லக்கூடாது நல்லா செய்யுறாம்யா…..வச்சு செய்யுறது னு நம்ம சென்னை அண்ணாச்சி கூட சொல்லுவாம்ளா…. அதேதான்ங்கிறேன்….

விவசாயமே ஒரு கார்ப்பரேட் மாதிரி நடத்தலாம்ங்கிறான் தம்பி ஜெயம் ரவி. நடத்துங்கிறேன். இந்த ஏழு குடும்ப கம்பெனிகல்ள வேல பாக்குற புள்ளைகெல்லாம் யாருன்னாக்கும். விவசாய நிலம் வச்சிருந்தும், தண்ணியில்லாம விவசாயத்த கை விட்டவந்தான், பூரா பேரும். இப்போ கை கோக்குறானல்லா. சேர்ந்து ஒழைச்சு சந்தைக்கு கொண்ட்டு வர்றான் ஜெயம் ரவி.
அந்த ஏழு குடும்பக்காரன் லாரிகள ஓடாம செய்யுதான், சூப்பர் மார்க்கெட் லையும் ஜெயம் ரவி காய் கறிய வாங்க விடாம பண்ணுதான்.

அடுத்தவன் கிட்ட வாங்குன காய்கறி எல்லாம் பல் விளக்குற பேஸ்டுக்கு இலவசமாவே குடுத்துட்டாம்லா….இதுனால ஜெயம் ரவி காய்கறி கல்லாம் விக்காதுல்லா….ஓடைஞ்சு போறான் தம்பி ஜெயம் ரவி
ஓடியாந்து வந்து பாரு மக்கா, நம்ம மக்க செய்யுற செயலங்கிறா, சரண்யா. அவதான் ஜெயம் ரவியோட தாயி….போயி பாத்து கதறி சந்தோசமா அழுவுரான்யா….ஜெயம் ரவி….ஏன் அழுவுறான், அப்படி மக்க என்ன செஞ்சாங்க, போய் தியேட்டருல பாரும்….அட இந்தப்படம் தியேட்டருல போடுறானில்லா….அது ஏதோ அந்த ஏழு குடும்ப கம்பெனிகாரன் நடத்துற ஒரு ஆப் ல தாம் வருதாம்!
