6 கோடி 29 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள். ஆளுமை பத்திதான் இந்தத்தேர்தல்ல பேச்சு. தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகள் இப்போ இல்ல. இதுவரை இருந்த ஆளுமையைப்பாத்து மட்டுமே ஓட்டுப்போட்ட வாக்காளர்களின் மன நிலை, இன்று எப்படி இருக்கிறது என்பதைத்தேர்தல் முடிவு செய்யும்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 91000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத்தேர்தலுக்கு முன் லாக்டவுன் நம் கண் முன்னே வருது. லாக்டவுன் போது பலர் தற்காலிகமாக வேலை இழந்தாங்க, பலரின் தொழில், வருமானம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. உண்மை. நிச்சயம் அது நடந்திருக்கக்கூடாதுதான். ஆனால், இந்த சமயத்தில் பரவும் தொற்றைக்கட்டுப்படுத்த வேறு வழியே இல்லாமல்தானே இது நடந்தேறியதுனு மனசுக்கு தெரியுது. நம்முடைய அறிவு “நான் பாதிக்கப்பட்டேனே” அப்படினு நினைக்குது, அப்போது மனசும் வலிக்குது.
ஒன்னு புரிஞ்சுக்கணும். அமெரிக்கா மாதிரியான, வளர்ந்த நாடுகள்லேயே இன்றும் கூட நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். 33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் நேற்று வரை(3 ஏப்ரல் 2021) இன்னமும் 69 லட்சம் மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்காங்க.
ஆனால், 139 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சுமார் 6 லட்சம் பேர்தான் இப்போது சிகிச்சையில் இருக்காங்க. இது எப்படி சாத்தியப்பட்டது. லாக்டவுன் தொற்றைக்கட்டுப்படுத்திச்சு, உயிரிழப்புகள குறைச்சுது. ஆனா இது வரும் நாட்களில் கிடுகிடுவென ஏறும். நடந்து முடிந்த தேர்தல் பரப்புரைகள் அதற்கு காரணமாய் இருக்கும்.
ஒரு வைரஸ் அதன் தன்மையை காலப்போக்கில் மாத்திக்கொள்ளுமாம். படிச்சிருக்கோம். இதைத்தான் ம்யுடேஷன் னு ஆங்கிலத்துல சொல்றாங்க. அப்படி மாறும் போது அதன் வீரியம் அதிகரிக்குமே தவிர, குறையாது. இந்தச்செய்தி எல்லாமே உங்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வுக்காக மட்டுமே, பயமுறுத்த அல்ல. உரு மாறியிருக்குற இந்த வைரஸ், அதிக வீரியம் பெற்றுவிட்டதாகவும், இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்னு மருத்துவ உலகில் இப்போது பேச்சு. இதுவும் தகவலுக்காக மட்டுமே இங்கே பகிரப்படுகிறது.
தமிழ்நாட்டில் 21 லட்சத்துக்கும் மேல் முதல் முறை வாக்காளர்களைக்கொண்டது இந்தத்தேர்தல். லட்சக்கணக்கில் கூட்டம் சேர்த்து, பொதுக்கூட்டம் நடத்தி, தொற்றைப்பெருக்க காரணமா இருக்காங்களோனு பலருக்கும் கவலை ஏற்படுது. இது தானா சேர்ந்த கூட்டமா?. காசு கொடுத்து ஏதோ வச்சுக்கறது னு சொல்வாங்க, அது மாதிரிதான் இருக்கு.
கூட்டம் கூடுவது பணத்திற்காகத்தான், இல்லை பணத்திற்காகவும்தான். கட்சியிலேயே கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்காங்களே! கட்சிக்காக உயிரை கொடுக்கறது அப்படிங்கறது, இந்த தொற்றால் நடந்துடக்கூடாதுனுதான், இப்போதைக்கு நம் எண்ணமா இருக்கு. இதை எழுதும் நேரத்தில் தொற்று அதிகமாகிக்கொண்டு இருக்குனு புள்ளி விவரம், நமக்கு உணர்த்துது.
கட்சிகளோட பரப்புரையெல்லாம் இன்னியோட முடியுது. வாக்காளர்களாகிய மக்கள், தங்களோட ஊர்களுக்கு சென்னையிலிருந்து மட்டும் சுமார் 5100 சிறப்பு பேருந்துகளில், பல ஆயிரம் மகிழுந்துகளில்(கார்), தொடர் வண்டிகளில்(ட்ரெயின்) னு கிளம்ப ஆரம்பிச்சாச்சு. தலைவர்கள் பேச்ச கேட்க கூட்டம் கூடியது போய், ஊர்களுக்குச்செல்ல இப்போது கூட்டம் அலை மோதுகிறது. இந்தக்கூட்டம் போன வருடத்தை ஞாபகப்படுத்துது. தேர்தலுக்குப்பின் லாக் டவுன் வராது என்பது சொல்வதற்கு இல்லை.
பல பேர், வீட்டிலிருந்து கிளம்பி வெய்யிலில் கால் வலிக்க நின்னு, அப்படியாவது இந்த ஓட்ட போட்டுத்தான் ஆகணுமானு நினைக்கிறாங்க. வீட்டைவிட்டு அதிகமாக வெளியில் செல்லாத பெரும்பான்மையான இல்லத்தரசிகளும், வயது முதிர்ந்தவர்களும் யோசிக்கிறாங்க. லாக் டவுன் முதல் வீட்டிலேயே வேலை பார்த்துக்கொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஊழியர்களுக்கும் இந்த எண்ணம் வந்திருக்கு. அவர்களோட பேசும்போது இத என்னால உணர முடிஞ்சுது.
இதில் கூடுதல் பயம், தொற்று பரவலாலும்தான். பாதுகாப்பா போயிட்டு ஓட்டு போட்டுட்டு வர முடியுமான்னு ஒரு கேள்வி எல்லாரிடத்திலும் இருக்கு. கட்சிகள் நிமிடத்துக்கு நிமிடம் ஊடகங்கள் வழியா விளம்பரம் செய்து ஓட்டுக்கேட்கும் பணியை சிறப்பாக செய்யுது…ஆனா வாக்காளர்களை தேர்தல் மையத்துக்கு வர வைக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டிருக்குனு தேர்தல் ஆணையம் இன்னும் விளம்பரம் செய்யல. ஒரு வாக்குசாவடிக்கு அதிக பட்சம் 1000 பேர் என்பதுதான், தேர்தல் ஆணையம் வகுத்திருக்கும் யுக்தி. அதனாலதான் வாக்கு சாவடி எண்ணிக்கை இந்த முறை உயர்ந்திருக்கு.
நம்ம பாதுகாப்பான இடத்துக்கு போறோம். நமக்கு தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லைங்கற நிலைமை இருந்தாதான் வாக்காளர்களாகிய மக்கள், சற்றும் யோசிக்காமல் வாக்களிக்க வருவாங்க. இதை தேர்தல் ஆணையம், தேர்தலை சிறப்பாக நடத்துவதைப்போலவே, இதையும் சிறப்பாக செய்வார்களாயின், வாக்குப்பதிவின் சதவிகிதம் ஏறும். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்யணும். செய்யுமா?
உங்களுடைய தகவல் மற்றும் விழிப்புணர்வுக்காக, தலைமைத்தேர்தல் அதிகாரி செய்தியாளருக்கு அளித்த பதில்கள் இங்கு பதியப்படுகிறது.
1. நீங்கள் வெளி ஊர்களில் பணி நிமித்தமாகவோ, இல்லை வேறு காரணங்களுக்காகவோ இருப்பீர்களானால், நீங்கள் அங்கிருந்து கொண்டே ஓட்டு போட வழி இல்லை. பூத்தில் சென்றுதான் வாக்களிக்க வேண்டும். ஊருக்குத்தான் வந்தாக வேண்டும்.
2. ஓட்டு போட்டால் அதற்கான சாட்சியாக, அந்தப்பதிவின் ஸ்லிப் ஏதும் கொடுக்கப்படமாட்டாது. குறுஞ்செய்தி எனப்படும் எஸ் எம் எஸ் அனுப்பப்படும் நடைமுறையும் இப்போது இல்லை. ஆனால் ஒரு கருவியில், நீங்கள் எந்தச்சின்னத்துக்கு வாக்களிதீர்களோ அது தெரியும்.
3. வாக்குச்சாவடிகளில் (பூத்) களில் அலைபேசி (செல்போன்) எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.
4. மின்னணு வாக்கு இயந்திரத்தில் யார் எந்த தேதியில், எந்த நேரத்தில் வாக்களித்தார் என்பதை அறிய முடியும்
5. நீங்கள் வாக்களிக்கும் கட்சியின் சின்னத்தில், வாக்கு இயந்திரத்தின் விளக்கு எரியவில்லை எனில், பிரிசைடிங் ஆபிசரிடம் முறையிடலாம். அது உண்மை என்பதை சரி பார்க்கப்பட்டால், வாக்குப்பதிவு நிறுத்தப்படும். இல்லை என நிரூபிக்கப்பட்டால், முறையிட்டவரை சிறை செல்லவும் நேரிடலாம்.
6. வாக்கு செலுத்துவதற்கு பூத் ஸ்லிப் அவசியமில்லை. அரசின் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளான ஆதார் முதலியவற்றை காண்பித்து வாக்கு செலுத்தலாம்.
7. நோட்டாவை விடவும் ஒரு வேட்பாளர் குறைவான வாக்கு பெற்றாலும், நோட்டாவுக்கு அடுத்த அதிக வாக்கு, என்ற அடிப்படையில் அவர் வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்படுவார்.
8. வெளி நாடு வாழ் இந்தியர்களானாலும், அவரவர் தொகுதியில்தான் அவர்கள் வாக்கு செலுத்த முடியும்.
9. தேர்தல் நடத்தை விதிகளின்படி, பத்து லட்சத்துக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட பணம், வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்படும்.
10. மிக முக்கியமான செய்தி – காலை ஏழு மணி முதல், இரவு ஏழு மணி வரை இந்தத்தேர்தலில் வாக்களிக்கலாம்.
கவனமாய் இருந்து நம் ஜனநாயகக்கடமையை ஆற்றுவோம். யாருக்கு ஓட்டோ, கரெக்ட்டா போட்ருவோம்!!