மார்ச் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது எங்கள் யாருக்குமே தெரியாது நாங்கள் பல மாதம் ஒருவருக்கு ஒருவரை நேரில் சந்திக்க முடியாது என்பது….
மார்ச் 16 ஆம் தேதி திங்கட்கிழமை காலை எங்க நிறுவனம் அனுப்பின மின்னஞ்சலை அப்பதான் படிக்கிறேன்…ஒரே குதூகலம்…நான் ஏற்கனவே சொன்னது போல் சுடு சோறு என்பது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்…சூடு என்றவுடன் என் மனைவி காப்பி கொடுக்கும் போது, கொஞ்சம் சூடு பண்ணி கொடேன் னு நான் சொன்னவுடனே, உங்களுக்கு டம்ளரை காச்சிதான் குடுக்கணும் னு அன்பா சொல்றது நினைவுக்கு வந்தது. என் நாக்கு அவ்வளவு நீளம். வயித்துக்குள்ள போயி வெந்துக்கட்டும் னு நீங்க எப்பயாவது சாப்பிடும் போது சொல்லியிருப்பீங்கன்னா, நாமெல்லாம் ஒரே கட்சி.
எங்க நிறுவனத்துல வீட்டிலிருந்து வேல பாக்குறதுலாம் வழக்கத்துல இல்ல…
பல நேரங்கள்ல அது ஒத்து வராதுன்னு அந்த மாதிரி சலுகை யாருக்கும் கொடுக்கப்படல…அப்படி ஒரு சலுகை பெறுவதா இருந்தா ஒன்னு அவங்களுக்கு கொழந்த பொறந்திருக்கணும், இல்ல உடம்புக்கு முடியாம இருக்கணும்….
ஒரு கட்டத்துல குழுல இருக்க பல பேர் நாங்க எங்க சொந்த ஊருக்கு போயிடலாமான்னு என்னை கேக்க, ஏன்பா எப்படி நீங்க ஊர் போய் சேர்வீங்க னு நான் பதிலுக்கு அவங்கள கேக்க…. இங்க சாப்பாடு கிடைக்கில, ஹோட்டல்லாம் மூடிட்டாங்க, ஹாஸ்டல் மெஸ் லையும் சரியான சாப்பாடு இல்ல, அதுக்காகவே நாங்க போயி ஆகணும் ங்கிற சூழ்நிலை னு அவங்க சொன்னதுக்கப்புறம் தான் என் புத்தி க்கு உறைச்சுட்டுது…
குடும்பத்தோடு சென்னையில் வசிக்கிற என்னை மாதிரியான ஆளுக்கு இந்த லாக் டவுன் சோறு விஷயத்தில் வரம் னு சொல்லலாம். வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு வேலைக்காக சென்னை வந்த இவங்களோட நிலைமையை யோசிச்சு ஆக வேண்டிய கட்டாயம்…சரி போயிட்டு வாங்கன்னு சொல்றதுதான் சரி….ஆனா கவனமா இருங்க, பாதுகாப்பா போங்க…ன்னு சொல்ல மட்டுமே முடிஞ்சுது
தொடர்வேன்
உங்கள் சௌந்தர் ராஜன்.இரா.